ஷா ஆலம், ஜூலை 19- சில விவகாரங்களில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கும் கெஅடிலான் ராக்யாட் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் எண்ணத்தை கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கொண்டிருக்கவில்லை.
மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கும் தலைவர்களுக்கு மதிப்பளிக்கும் அதே வேளையில் கட்சியை வலுப்படுத்துவதற்கு முன்னோக்கிச் செல்லும்படி உறுப்பினர்களையும் தொகுதித் தலைவர்களையும் அன்வார் கேட்டுக் கொண்டதாக கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
நேற்று இங்கு நடைபெற்ற டத்தோஸ்ரீ அன்வார் மற்றும் சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைவர்களுடனான இரகசிய சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஃபாஹ்மி இதனைத் தெரிவித்தார்.
சில விஷயங்களில் ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறுப்பட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதை பிரதமர் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டினார். எனினும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் எண்ணத்தை அவர் கொண்டிருக்கவில்லை. தங்கள் கருத்துகளை முன்வைக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது. இதனை புரிந்து கொண்டு முன்னோக்கிச் செல்லும்படி கட்சி உறுப்பினர்களையும் தொகுதித் தலைவர்களையும் அன்வார் கேட்டுக் கொண்டார் என்றார் அவர்.
தொகுதி நிர்வாகக் குழு உறுப்பினர்களை நியமிக்கும் விஷயத்தில் உள்ளடங்கிய அணுகுமுறையைக் கடைபிடிக்கும்படி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதித் தலைவர்களை அன்வார் கேட்டுக் கொண்டார் என்றும் ஃபாஹ்மி சொன்னார்.
அண்மையில் நடைபெற்ற தொகுதி தேர்தல்களில் தோல்வி கண்டவர்கள் அல்லது சொந்த அணியைச் சேராதவர்களை கட்சியை ஒன்றிணைத்து வலுப்படுத்துவதற்கு ஏதுவாக நிர்வாக க் குழுவில் இணைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மாநில தலைமைத்துவ மன்றத் தலைவர் பதவிக்கான நியமனங்கள் இம்மாத இறுதிக்குள் இறுதி செய்யப்படும் எனக் கூறிய அன்வார், அடிமட்ட மக்களின் ஆதரவை வலுப்படுத்துவதற்காக கட்சியின் இயந்திரத்தை முடுக்கி விடும்படி தலைவர்களை பணித்துள்ளார்.


