ஷா ஆலம், ஜூலை 20- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஏழு முக்கிய நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் தற்போது 90 விழுக்காடாக உள்ளது. வறட்சி நிலை அல்லது தென்மேற்கு பருவமழையில் காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் மாநிலத்தில் நீர்த் தேவையை சமாளிக்கும் அளவுக்கு கச்சா நீர் கையிருப்பு உள்ளது.
மாநிலத்திலுள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் சீரான அளவில் உள்ளதோடு மழையே இல்லாவிட்டாலும் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தாக்குப் பிடிக்கும் ஆற்றலை அவை கொண்டுள்ளன என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹஷிம் கூறினார்.
வெப்ப வானிலையை எதிர்கொள்ளும் சூழல்களில் சிலாங்கூர் ஆற்றோர நீர் சேகரிப்பு குளத் திட்டத்தின் (எஸ்.ஒ.ஆர்.எஸ்.எஸ்.) கீழ் 115 குளங்களில் செயல்பாடு முடுக்கி விடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இது மாற்று நீர் விநியேகத்திற்கான வளமாகவும் நடப்புத் தேவையை நான்கு மாதங்கள் வரை ஈடுசெய்வதற்கான ஆற்றலைக் கொண்டதாகவும் இருக்கும் என அவர் தெரிவித்தார்.
வறட்சி நிலை நிலவிய போதிலும் நீர்த்தேக்கங்களில் நீர் அளவு சீராக உள்ளதால் பொது மக்கள் நீர் விநியோகம் குறித்து கவலையடைய வேண்டியதில்லை என்று அவர் சொன்னார்.
மாநிலத்தில் வறட்சி மற்றும் நீர் மாசுபாடு பிரச்சினைகளுக்கு 99 விழுக்காடு வரை தீர்வு காணும் ஆற்றலை எஸ்.ஜே.ஏ.எம். எனப்படும் மூல நீர் ஆதார உத்தரவாதத் திட்டம் கொண்டிருக்கும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மே மாதம் கூறியிருந்தார்.


