ஷா ஆலம், ஜூலை 18: சிலாங்கூர் நல்வாழ்வு உதவி அட்டை (பிங்காஸ்) இப்போது சிலாங்கூர் முழுவதும் உள்ள அனைத்து எஹ்சான் ரஹ்மா மடாணி விற்பனை நிலையங்கள் மற்றும் எஹ்சான் மார்ட் கிளைகளில் பயன்படுத்தலாம்.
பிங்காஸ் அட்டையைப் பயன்படுத்தி பொருள் வாங்க விரும்பும் பொதுமக்கள் பதிவு மற்றும் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக தங்கள் அடையாள அட்டையை கொண்டு வருமாறு சிலாங்கூர் வேளாண் மேம்பாட்டுக் கழகம் (PKPS) கேட்டுக் கொண்டுள்ளது.
“இந்த சனிக்கிழமை முதல் பிங்காஸ் அட்டையைப் பயன்படுத்தி எஹ்சான் ரஹ்மா மடாணி விற்பனையில் எளிதாகப் பணம் செலுத்துங்கள். இது நிச்சயமாக சிக்கனமானது, வேகமானது மற்றும் மக்களுக்கு ஏற்றது!” என்று அதன் முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
இல்திசாம் சிலாங்கூர் பென்யாயாங்கில் உள்ள 46 திட்டங்களில் பிங்காஸ் ஒன்றாகும். இது இரண்டு ஆண்டுகளுக்கு RM300 மாதாந்திர உதவியை வழங்குகிறது.
இந்த திட்டத்தின் மூலம் குறிப்பாக RM5,000 மற்றும் அதற்குக் குறைவான மாத வருமானம் கொண்ட குடும்பங்கள் பயனடைய இயலும். இத்திட்டத்திற்கு RM108 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எஹ்சான் ரஹ்மா மடாணி விற்பனை நிலையங்களின் அட்டவணையை அறிய, பொதுமக்கள் linktr.ee/myPKPS என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.


