SELANGOR

உலு லங்காட்டில் நாளை ஜெலாஜா ஜோப்கேர்- 3,197 பேருக்கு வேலை வாய்ப்புகள்

18 ஜூலை 2025, 1:42 AM
உலு லங்காட்டில் நாளை ஜெலாஜா ஜோப்கேர்- 3,197 பேருக்கு வேலை வாய்ப்புகள்
உலு லங்காட்டில் நாளை ஜெலாஜா ஜோப்கேர்- 3,197 பேருக்கு வேலை வாய்ப்புகள்

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், ஜூலை 18 -  சிலாங்கூர் மாநில அரசு மைபியூச்சர் ஜோப்ஸ்  (MYFutureJobs) வேலை வாய்ப்பு நிறுவனத்துடன் இணைந்து  உலு லங்காட் மாவட்ட நிலையிலான  வேலை வாய்ப்பு கண்காட்சியை நாளை ஜூலை 19ஆம் தேதி (சனிக்கிழமை) நடத்தவுள்ளது.

உலு லங்காட்டில் உள்ள அம்பாங் ஜெயா நகராண்மைக்கழக மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை   நடைபெறும் இந்நிகழ்வில் வேலை தேடிக்கொண்டிருக்கும் சமூகத்தின் அனைத்து நிலையிலான மக்களும் கலந்து பயனடையுமாறு மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கேட்டுக் கொண்டார்.

மாநிலத்தில் வேலை தேடுபவர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த  முதலாளிகளுடனான  நேரடிச் சந்திப்புகள் மூலம் வேலை  பெறுவதற்குரிய வாய்ப்பினை இந்த வேலை வாய்ப்பு கண்காட்சி வழங்குகிறது என்று அவர் கூறினார்.

25 முதலாளிகள் பங்கேற்கும் இந்த இந்த கண்காட்சியில் மொத்தம் 3,197 வேலை வாய்ப்புகள்  வழங்கப்படுகின்றன. இந்த வேலை வாய்ப்பு சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனை (37%), போக்குவரத்து மற்றும் சேமிப்பு (16%), உணவு மற்றும் பான சேவை (14%), நிர்வாகம், கல்வி, தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆதரவு சேவைகள் போன்ற பிற துறைகளையும் உள்ளடக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பல நிறுவனங்கள் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகளை  வழங்குகின்றன. அவற்றில் 13,000 வெள்ளி  வரை சம்பளத்துடன் கூடிய தகவல் தொழில்நுட்ப விநியோக  மேலாளர், தயாரிப்பு மேலாளர் (வெ.8,000 முதல் வெ.10,000 வரை) மற்றும் உயர் மின்னழுத்த சார்ஜ்மேன் (வெ.7,000 முதல் வெ.9,000 வரை) ஆகியவையும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

இங்கு வழங்கப்படும்  வேலை வாய்ப்புகளில் 66.16 விழுக்காடு 2,500 வெள்ளிக்கும் அதிகமான சம்பளத்தையும்  33.84% வேலைகள்  2,500 வெள்ளிக்கும் குறைவான சம்பளத்தையும் வழங்கக்கூடிய வேலை வாய்ப்புகளை கொண்டுள்ளன என்றார் அவர்.

89.8% வேலை வாய்ப்புகள் சிலாங்கூரிலும் 10.2% வேலை வாய்ப்புகள் சிலாங்கூருக்கு வெளியிலும் வழங்கப்படுகின்றன.

மேலும்  உடனடி  நேர்காணல்கள், சுகாதார பரிசோதனை, அரசு நிறுவனங்களின்  கண்காட்சி, தொழில் ஆலோசனை சேவைகள் மற்றும் ஏஹ்சான் ரஹ்மா விற்பனை ஆகியவையும் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள், குறிப்பாக வேலை தேடுபவர்கள் இங்கு வழங்கப்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள் என அவர் சொன்னார்.

வேலை தேடுபவர்கள்  https://forms.office.com/r/exFRL57sE6. என்ற இணைப்பின் மூலம் மூலம் பதிவு செய்யலாம். சிலாங்கூர் வேலை வாய்ப்பு கண்காட்சி தொடர்பான கூடுதல் விளக்கங்கள் மற்றும் தகவல்களுக்கு யு.பி.பி.எஸ். பிரிவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பவித்ரா  மோகனதாஸை 011-3331 1148 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.