அம்பாங் ஜெயா, ஜூலை 17 - அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக (எம்.பி.ஏ.ஜே.) பகுதியில் உள்ள உணவு வளாகங்கள், சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் எலிகளின் பெருக்கத்திற்கு காரணமாக இருப்பது கண்டறியப்பட்டால் அவை அமலாக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.
தீங்கிழைக்கும் உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகுவதைக் கட்டுப்படுத்த உள்ளூர் அதிகாரிகள் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த அமலாக்க நடவடிக்கை அமைவதாக நகராண்மைக் கழகத்தின் மக்கள் தொடர்பு மற்றும் செயலகப் பிரிவின் தலைவர் நோர்ஹயாதி அகமது தெரிவித்தார்.
அம்பாங் கிராண்ட் மார்க்கெட் போன்ற பொதுச் சந்தைப் பகுதிகளில் எலி ஒழிப்பு பிரச்சாரத்தை எம்.பி.ஏ.ஜே. தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
எலிகளின் எண்ணிக்கையை ஏழு நாட்களுக்கு கண்காணிப்பதன் அடிப்படையில் பெக்கான் அம்பாங் சந்தை, பாண்டான் ஜெயா சந்தை, தாசேக் தம்பஹான் சந்தை மற்றும் கோல அம்பாங் சந்தை போன்ற பல சந்தைகளில் இடத் தேர்வு நிர்ணயிக்கப்பட்டது. அதிக எலி எண்ணிக்கையைப் பதிவு செய்ததால் பெக்கான் அம்பாங் சந்தை தேர்ந்தெடுக்கப்பட்டது என்று அவர் சிலாங்கூர் மீடியாவிடம் கூறினார்.
எலி ஒழிப்பு பிரச்சாரம் மற்றும் தூய்மையான பொது சந்தை பிரச்சாரம் வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சு மற்றும் உள்ளூர் சமூகத்துடன் இணைந்து முறெடுத்துள்ள எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
விஷம் தெளித்தல் மற்றும் பகுதியை சுத்தம் செய்தல் போன்ற வழக்கமான நடவடிக்கைகளுடன் "ஹாட்ஸ்பாட் பகுதிகளில் விஷத்தைப் பயன்படுத்தி எலிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் செயல்படுத்தப்படுகின்றன என்று அவர் சொன்னார்.


