ஷா ஆலம், ஜூலை 14- அதிக செலவினம் மற்றும் நுட்ப நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் காணப்படும் சிரமம் ஆகிய காரணங்களால் மழலையர் பள்ளிகளை நடத்துவோர் சமூக நல இலாகாவில் பதிவு செய்யத் தயங்குவதாக சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறினார்.
பதிவு செய்யப்படாத மழலையர் பள்ளிகளை பதிவு நடவடிக்கையின் வழி சட்டப்பூர்வமாக ஆக்குவதற்கு உதவ மாநில அரசு சிறப்பு செயல்குழுவை அமைத்துள்ளதாக அவர் சொன்னார்.
சிறார் பராமரிப்பு மையங்களாகவும் செயல்படும் இந்த பள்ளிகளை பதிவு செய்வதில் காணப்படும் நுட்ப ரீதியான தர நிர்ணயங்களை பூர்த்தி செய்வதில் அந்த செயல்குழு உதவும். அதேவேளையில் அவற்றுக்கு தலா 5,000 வெள்ளி மானியமும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நிலவரப்படி சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நான்கு வயது வரையிலான சிறார்களில் 5.8 விழுக்காட்டினர் மட்டுமே பதிவு பெற்ற மழலையர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருந்தனர். பதிவு பெற்ற பள்ளிகள் விஷயத்தில் நீண்ட இடை வெளி காணப்படுவதையும் மாநிலத்தில் பள்ளிகள் பதிவு பெற வேண்டியதன் அவசியத்தையும் இது உணர்த்துகிறது என அவர் கூறினார்.
ஆகவே, இதன் அடிப்படையில் சிலாங்கூரில் பதிவு பெற்ற மழலையர் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அதன் நடத்துவர்களுக்கு மானிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம் என்று அன்ஃபால் தெரிவித்தார்.
விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்யாதது, பொருத்தமற்ற வளகாங்கள், தீர்க்க முடியாத நுட்பக் காரணங்களால் விண்ணப்ப பரிசீலனை தடைபடுவது உள்ளிட்டவை மழலையர் பள்ளிகளை பதிவு செய்ய முடியாமல் போவதற்கு காரணமாக விளங்குகின்றன என அவர் குறிப்பிட்டார்.


