(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 14- கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் இங்குள்ள செக்சன் 28, டேவான் கெனாங்கா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற செயற்கை நுண்ணறிவுப் (ஏ.ஐ.) பயிற்சியில் மூவினங்களையும் சேர்ந்த 30 மாணவர்கள் பங்கு கொண்டனர்.
இன்றைய அன்றடாட வாழ்வில் மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் சாட்ஜிபிடி, டீப்சீக் உள்ளிட்ட பல்வேறு செயற்கை நுண்ணறிவு செயலிகள் தொடர்பான அறிவாற்றலை இளையோர் பெற்றிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமை
தாங்கினார்.
பதினேழு வயதுக்கும் மேற்பட்ட இளையோரை குறிப்பாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் கிடைக்கப் பெற்று எஸ்.டி.பி.எம்., மெட்ரிக்குலேஷன் போன்ற துறைகளில் கல்வியைத் தொடரவுள்ள மாணவர்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் 30 மாணவர்கள் கலந்து கொண்டதாக பிரகாஷ் தெரிவித்தார்.

பல எஸ்.பி.எம். மாணவர்கள் தங்களின் கல்வியைத் தொடர உயர்கல்விக் கூடங்களுக்கு சென்று விட்டதால் தொடக்கக் கட்டமாக 30 மாணவர்களை மட்டுமே இலக்காகக் கொண்டு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
எனினும் அதிகமானோர் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள இணையம்
வழி விண்ணப்பம் செய்திருந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு வரும் ஆகஸ்டு மாதம் 9ஆம் தேதி ஆலம் மேகாவில் 200 பேர் பங்கு பெறும் அளவில் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருகிறோம்
என பிரகாஷ் கூறினார்.
இந்த பயிற்சியில் மாணவர்கள் மட்டுமின்றி வர்த்தகர்கள், இல்லத்தரசிகள்,
தொழில் புரிவோர் உள்பட 17 வயதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள
வாய்ப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இப்பயிற்சியின் இறுதியில் பங்கு கொண்ட அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.



