ஷா ஆலம், ஜூலை 14- மலேசிய உற்பத்திக் கழகத்திடமிருந்து (எம்.பி.சி.) சுற்றுச்சூழல் தரச் சான்றிதழ் (கியூ.இ.) 5.0 பெற்ற முதலாவது ஊராட்சி மன்றம் என்ற கௌரவத்தை ஷா ஆலம் மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஏ.) பெற்றுள்ளது.
ஏறக்குறைய 2 கோடி வெள்ளி மதிப்பிலான 20 கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை அமல் படுத்தியதன் மூலம் மாநகர் மன்றத்திற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதாக ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ முகமது பவுஸி முகமது யாத்திம் கூறினார்.
பதிமூன்றாவது மலேசியத் திட்டத்தின் அமலாக்கத்திற்கு தயாராவதற்கு ஏதுவாக பொதுச் சேவைத் துறையில் புத்தாக்கத்தை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தக் கூடிய ஒரு முன்னுதாரண அமைப்பாக ஷா ஆலம் மாநகர் மன்றம் விளங்க முடியும் என்ற நம்பிக்கையை எம்.பி.சி. வழங்கியுள்ளதாக அவர் சொன்னார்.
இலக்கவியல் நடைமுறை முயற்சிகள், செலவினக் குறைப்பு மற்றும் வாடிக்கையாளர் மனநிறைவு ஆகியவற்றை உள்ளடக்கிய திட்ட அமலாக்கத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக இது விளங்குகிறது என்று மீடியா சிலாங்கூரிடம் அவர் தெரிவித்தார்.
நவீன, திறன்மிக்க மற்றும் நீடித்த மாநகர் மன்ற அமைப்க எம்.பி.எஸ்.ஏ. விளங்குவதில் உதவக்கூடிய அடைவு நிலை, வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பின் ஒரு பகுதியாக இந்த சாதனை அமைந்துள்ளது என்றார் அவர். ஊராட்சி மன்றப் பொது சேவையில் சிறப்பான கலாச்சாரத்திற்கான உந்து சக்தியாக இந்த அடைவு நிலை விளங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


