ஷா ஆலம், ஜூலை 14- மலேசிய சிலாங்கூர் வன ஆராய்ச்சிக் கழகம் (FRIM-FPS) யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப் பட்டதன் வழி நாட்டின் சுற்றுலா தோற்ற வடிவம் கணிசமாக உயரும் அதேவேளையில் சுற்றுச்சூழல் சார்ந்த பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அங்கீகாரம் 2025 சிலாங்கூர் வருகை ஆண்டு மற்றும் 2026 மலேசியா வருகை ஆண்டு ஆகியவற்றின் இலக்குகளுக்கு ஏற்ப அமைந்துள்ளதோடு உள்நாட்டு மற்றும் அனைத்துலக சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மாநிலத்தின் மீதான ஈர்ப்பை மேலும் மேம்படுத்தும் என்று புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங் கூறினார்.
புக்கிட் லஞ்சன் தொகுதிக்குள் அமைந்துள்ள ஃப்ரிம் 544 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மற்றும் வெப்பமண்டல மழைக்காடுகளின் ஆராய்ச்சி, கல்வி மற்றும் பாதுகாப்பிற்கான முக்கிய மையமாக செயல்படுகிறது.
இந்த தளம் உலகின் தொடக்ககால பெரும் அளவிலான சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு திட்டங்களில் ஒன்றாகும். இது மலேசியாவின் நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகத்திற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த அங்கீகாரம் சூழலியல், தாவரவியல் மற்றும் வனவியல் ஆராய்ச்சித் துறைகளில் அந்த கழகத்தின் பங்கை மேலும் வலுப்படுத்துவதோடு உலகளாவிய பல்லுயிர் பாதுகாப்பு முயற்சிகளில் மலேசியாவின் பங்களிப்பிற்கு ஒரு சான்றாகவும் செயல்படுகிறது என்றும் புவா மேலும் கூறினார்.
எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை பாரம்பரியமாகவும், விலைமதிப்பற்ற அறிவு ஆதாரமாகவும் இருக்கும் இந்தப் பசுமையான புதையலைப் பாராட்டவும் பாதுகாக்கவும் வேண்டும் என்று பொதுமக்களுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.


