ஷா ஆலம், ஜூலை 9 - உணர்வுசார் பிரச்சனைகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட மிண்டா சிஹாட் திட்டம் இடைநிலைப் பள்ளிகள் உட்பட பள்ளிகளிலும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருவதாகப் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
மாணவர்களிடையே காணப்படும் மன அழுத்தப் பிரச்சனை தொடர்பான மாநில அரசின் கவலையையும் ஆரம்ப கட்டத்திலேயே அதனைத் தடுப்பதற்கான தீவிர அர்ப்பணிப்பையும் இந்த முயற்சி பிரதிபலிக்கிறது.
மாநிலத்திலுள்ள 36,000க்கும் மேற்பட்ட மாணவர்களில் 2.8 சதவீதம் பேர் மட்டுமே மனச்சோர்வின் ஆரம்ப அறிகுறிகளை வெளிப்படுத்தியது அந்த மனநல பரிசோதனையின் மூலம் தெரியவந்தது. இருப்பினும், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதை தரவு காட்டுகிறது என்று அவர் சொன்னார்.
அதனால்தான் நாங்கள் மிண்டா சிஹாட் திட்டத்தை அமல்படுத்துகிறோம். இதில் தடுப்பு உட்பட ஐந்து முக்கிய வியூகங்கள் அடங்கியுள்ளன. இதற்காக தனித் திட்டம் தேவையில்லை. தற்போது அது அனைத்து இடைநிலைப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படுகிறது என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
முன்னதாக, மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது பேசிய ஜமாலியா, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 36,428 இடைநிலைப் பள்ளி மாணவர்களில் 1,020 பேர் அல்லது 2.8 விழுக்காட்டினர் அதிக ஆபத்துள்ள ஆரம்பகால மனச்சோர்வு அறிகுறிகளைக் காட்டியதாக தெரிவித்தார்.


