SELANGOR

குப்பை பிரச்சனையைத் தீர்க்க கடுமையான தொனியில் அறிவிப்பு- கோத்தா கெமுனிங் தொகுதியில் நூதன முயற்சி

8 ஜூலை 2025, 4:19 AM
குப்பை பிரச்சனையைத் தீர்க்க கடுமையான தொனியில் அறிவிப்பு- கோத்தா கெமுனிங் தொகுதியில் நூதன முயற்சி
குப்பை பிரச்சனையைத் தீர்க்க கடுமையான தொனியில் அறிவிப்பு- கோத்தா கெமுனிங் தொகுதியில் நூதன முயற்சி
குப்பை பிரச்சனையைத் தீர்க்க கடுமையான தொனியில் அறிவிப்பு- கோத்தா கெமுனிங் தொகுதியில் நூதன முயற்சி

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், ஜூலை 8 - கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி எதிர்நோக்கி வரும் சவால் நிறைந்த பிரச்சனைகளில் மிக முக்கியமானதாக விளங்குவது குப்பைகளை கண்ட இடங்களில் வீசும் பொறுப்பற்ற தரப்பிரின் செயலாகும்.

இந்த பிரச்சனை புக்கிட் கெமுனிங் சாலை நெடுகிலும் காணப்படுகிறது. முறையான திட்டமிடலுக்கு உட்படாத குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளை உள்ளடக்கிய இந்த புக்கிட் கெமுனிங் பகுதியில் நிலவும் பிரச்சனைகள் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 14 மண்டலத்திற்கு பெரும் தலைவலியாக உள்ளது.

உள்நாட்டினர் மட்டுமின்றி இவ்வட்டாரத்தில் பெருகிக் காணப்படும் அந்நிய நாட்டினரும் இந்த குப்பைப் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றனர்.

குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வது, தன்னார்வலர்களின் உதவியுடன் குப்பைகளை வீசுவோரை அடையாளம் கண்டு அவர்களுக்கு குற்றப்பதிவுகளை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் சாலையோரங்களில் குவியும் குப்பைகளின் அளவும் சிறிதும்

குறையவில்லை.

தீர்க்கவே முடியாத இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியாக இத்தகைய பொறுப்பற்றத் தரப்பினரின் தன்மானத்தை சற்றே சீண்டிப்பார்க்கும் விதமாகக் குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் கடுமையான தொனியிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“முட்டாள்கள் மட்டுமே கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவார்கள்“ என

மலாய் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்களை படிக்கும் நபர்கள்

தாங்கள் முட்டாள்கள் அல்ல என்பதை நிரூபிப்பதற்காகவது குப்பைகளை

வீசமாட்டார்கள் என்ற நப்பாசையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புக்கிட் கெமுனிங் சாலையின் இரு மருங்கிலும் காணப்படும் குப்பைக் குவியல் எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்துவதோடு சுகாதாரப் பாதிப்பையும் ஏற்படுத்துவதாக ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 14வது மண்டலத்திற்கான பொறுப்பான கவுன்சிலர் யோகேஸ்வரி சாமிநாதன் கூறினார்.

சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய இந்த பகுதியின் அவல நிலை குறித்து நான் மிகுந்த வேதனையும் ஏமாற்றமும் அடைகிறேன் என அவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

தங்கள் இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை சிறிதும் உணராத உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினரின் பொறுப்பற்றச் செயலே இந்த பிரச்சனைக்கு காரணம் எனத் தாம் கருதுவதாக அவர் சொன்னார்.

குப்பைக்கூளங்களிலிருந்து விடுபட்ட சுத்தமான பகுதியை உருவாக்கும் தனது முயற்சிக்கு அனைத்து தரப்பிரின் ஒத்துழைப்பு கிடைப்பது கடினமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.