ஷா ஆலம், ஜூலை 7- இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் 36,428
மாணவர்களிடம் நடத்தப்பட்ட 2024/2025 மாணவர் மன நல சோதனையில்
2.8 விழுக்காட்டினர் உயர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மன
அழுத்தத்தால் பாதிக்கப்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகளைக்
கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அந்த மாணவர்களிடம் நடத்தப்பட்ட நோயாளிகளுக்கான கேள்வி-பதில்
பாணியிலான ஆய்வில் 1,020 மாணவர்கள் மன அழுத்த பிரச்சனைக்கான
சாத்தியத்தைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது என சுகாதாரத்
துறைக்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா
ஜமாலுடின் கூறினார்.
இந்த திட்டத்திற்கான சோதனை தரவுகள் மீதான ஆய்வுகளின்
அடிப்படையில் சிலாங்கூரிலுள்ள மாணவர்கள் மத்தியில் எதிர்மறையான
உளவியல் நடத்தை அளவு கட்டுப்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது
என்று அவர் சொன்னார்.
எனினும், நெருக்கடி பிரிவினர் என வகைப்படுத்தப்பட்ட மாணவர்கள் மீது
பிரத்தியேக மற்றும் தீவிர கவனத்தை கவுன்சிலிங் ஆசிரியர் செலுத்துவர்
என அவர் குறிப்பிட்டார்.
இந்த விரிவான இடையீட்டுத் திட்டம் இடைநிலைப்பள்ளிக்கு குறிப்பாக
ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
மாணவர்கள் மத்தியில் மன நலம் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவது
இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்றார் அவர்.
மாநில சட்டமன்றத்தில் இன்று போர்ட் கிள்ளான் தொகுதி உறுப்பினர்
அஸ்மிஸாம் ஜமான் ஹூரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்
அவர் இதனை தெரிவித்தார்.
மாணவர்களின் உணர்வுகள் தொடர்பான விவகாரங்களுக்கு மாநிலக் கல்வி
இலாகா எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதோடு மிண்டா சேஹாட்
திட்டம் உள்ளிட்ட முன்னெடுப்புகளை அமல்படுத்தவும் தயாராக உள்ளது
என ஜமாலியா சொன்னார்.


