ஷா ஆலம், ஜூலை 7- எண்ணெய் பெடலை தவறுதலாக அழுத்திய ஓட்டுநரின் செயலால் புரோட்டோன் எக்ஸ்50 வாகனம் ஒன்று உணவகத்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தது.
சுபாங் ஜெயா, எஸ்எஸ்14/1 சாலையில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 6.20 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார்.
அந்த ஓட்டுநர் கார் நிறுத்துமிடத்தை நோக்கி தனது வாகனத்தைச் செலுத்தியுள்ளார். எனினும், தவறுதலாக எண்ணெய் பெடலை அழுத்தியதால் அது முன்னோக்கி நகர்ந்து உணவகத்தின் கண்ணாடியை உடைத்ததாக அவர் சொன்னார்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் கூறிய அவர், இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 43(1)வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
இந்த விபத்து குறித்து சம்பந்தப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர் சுபாங் ஜெயா மாவட்ட சாலை போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையிடம் புகார் அளித்துள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.


