ஷா ஆலம், ஜூலை 7- சமயப் பள்ளி மேம்பாட்டு நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட 140,000 வெள்ளியை மோசடி செய்ததாக சுயேச்சை சமயப் பேச்சாளருக்கு எதிராக இரண்டு புகார்கள் கிடைத்துள்ளதை சிலாங்கூர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் தொடர்பில் கோம்பாக் மற்றும் ஷா ஆலம் மாவட்டங்களைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தகாக இரு உள்ளூர் பெண்களிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்றுள்ளதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஒரு நிறுவனத்தின் உரிமையாளருமான பாதிக்கப்பட்ட முதலாவது பெண்ணுக்கு 30 வயதுடைய உள்நாட்டவரான அந்த சுயேச்சை சமயப் பேச்சாளர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அறிமுகமாகியிருந்ததாக அவர் கூறினார்.
சிலாங்கூரில் அமைந்துள்ளதாக நம்பப்படும் ஒரு சமயப் பள்ளியை மேம்படுத்தும் நோக்கத்திற்காக கடந்த 2020 ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை மொத்தம் 60,000 வெள்ளி பணப் பரிமாற்ற பரிவர்த்தனையை மூன்று முறை செய்யத் தூண்டியதன் மூலம் சந்தேக நபர் அம்மாதுவை ஏமாற்றியுள்ளார் என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு வாக்கில் 80,000 வெள்ளியைச் செலுத்தியதாக ஹூசேன் சொன்னார். பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற ஒரு சமய நிறுவனத்தின் பெயரை சந்தேக நபர் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.
ஒரு சமயப் பேச்சாளர் ஆபாச காணொளியைப் பரப்பியது தொடர்பான புகாரை தனது துறை விசாரித்து வருவதாக ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் நேற்று கூறியிருந்தார்.


