ஷா ஆலம், ஜூலை 5- இங்குள்ள செக்சன் 13, பெர்சியாரன் சுக்கானில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதியதில் நான்காம் படிவ மாணவர் ஒருவர் உயிரிழந்ததோடு அவரது நண்பர் காயமடைந்தார்.
செக்சன் 9, தேசிய இடைநிலைப் பள்ளியில் பயிலும் அவ்விரு மாணவர்களும் இரவு 9.45 மணியளவில் செக்சன் 13, ரம்லி ஹலால் மார்ட் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.
பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் சாலைப் தடுப்பில் மோதியது இதனால் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்தவர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். ஓட்டுநர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த நான்காம் படிவ மாணவர் கழுத்து மற்றும் காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிந்த பொதுமக்கள் ஷா ஆலம் மாவட்ட காவல் தலைமையகத்தின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவின் புலனாய்வு அதிகாரியான இன்ஸ்பெக்டர் அப்துல் நாசர் பெப்பிங்கை 012-2863875 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறும் முகமட் இக்பால் கேட்டுக் கொண்டார்.


