ஜெர்த்தே, ஜூன் 29 - புலாவ் பெர்ஹெந்தியான் அருகே நேற்றிரவு படகு கவிழ்ந்ததில் மூன்று மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுமிகள் உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
இரவு 10.30 மணியளவில் நடந்த விபத்தில் இறந்தவர்கள் எஸ். ஆறுமுகம் (வயது 40), அவரது மூன்று வயது மகள் ஏ. சர்விகா மற்றும் அவர்களது 10 வயது உறவினர் வி. வெண்பனி ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பெசுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசாமுடின் அகமது @ அபு கூறினார்.
படகில் இருந்த ஆறு மாத் குழந்தை உள்பட 12 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக பெசுட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மூன்று முதல் 40 வயதுக்குட்பட்ட 15 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு புயல், கனமழை காரணமாக கடல் கொந்தளிப்பில் சிக்கி கவிழ்ந்தது. அவர்கள் அனைவரும் லைஃப் ஜாக்கெட் எனப்படும் உயிர்காப்பு அங்கி அணிந்திருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருபது வயது மதிக்கத்தக்க படகு ஓட்டுநர் விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பெசுட் மாவட்ட காவல் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர்
கூறினார்.
உள்ளூர்வாசியான அந்த ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் தொடர்பான ஐந்து குற்றப் பதிவுகளும் அவருக்கு உள்ளன.
ரிசார்ட் கடற்கரைகளில் இருக்கும்போது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அசாமுடின் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.








