சிரம்பான், ஜூன் 29- உயர் சக்தி கொண்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆடவர் ஒருவர், டிலெய்லருடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கோர விபத்து வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 254.6வது கிலோ மீட்டரில் வடக்கு தடத்தில் நேற்று நிகழ்ந்தது.
நேற்று மாலை 4.00 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் 51 வயதான அந்த ஆடவர் தலையில் ஏற்பட்ட பலத்தக் காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஹாத்தா சே டின் கூறினார்.
போர்ட் ரேஞ்ச் ரோவர் நான்கு சக்கர இயக்க வாகனத்தில் தன் மனைவியுடன் ரெம்பாவிலிருந்த ஷா ஆலம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 65 வயது முதியவர் திடீரென தனது வாகனத்தை நிறுத்திய காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் சொன்னார்.
அவசரத் தடத்தில் அந்த வாகனம் பயணித்த வேளையில் அதன் பின்னால் பி.எம்.டபள்யூ. மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஆடவர் வாகனத்தின் வலது புற பக்கவாட்டுக் கண்ணாடியை மோதியுள்ளார்.
இந்த மோதல் காரணமாக சாலையின் வலது பக்கத்தில் விழுந்த அவரை பின்னால் வந்து கொண்டிருந்த டிரெய்லர் மோதி இழுத்துச் சென்றது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
அதே தடத்தில் வந்து கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் கட்டுப்பாட்டை இழந்து அந்த நான்கு சக்கர இயக்கத்தின் பின்புறம் மோதியது என்று அவர் சொன்னார்.
அந்த வாகனத்தில் இருந்த ஓட்டுநர், பயணி, மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டி மற்றும் டிரெய்லர் ஓட்டுநர் ஆகியோர் இவ்விபத்தில் காயமின்றி உயிர்த்தப்பினர் என்றார் அவர்.
இவ்விபத்தில் பலியான ஆடவரின் உடல் சவப்பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறிய அவர், இந்த விபத்து குறித்து 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்றார்.



