கோலாலம்பூர், ஜூன் 29 - கூட்டரசு தலைநகரில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களைத் தடுக்கும் நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்ததில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்.
இந்த விபத்து ஜாலான் கூச்சிங்கில், ஜாலான் துன் ரசாங் வழியாக செலாயாங் நோக்கிச் செல்லும் தடத்தில் அதிகாலை 4.30 மணிக்கு நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் 24 வயதான லான்ஸ் கார்ப்ரல் முகமது அமிருல் அய்மான் முகமது ஓத்மான் சம்பவ இடத்திலேயே பலியானதாக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் ஏசிபி முகமது ஜம்சுரி முகமது ஈசா கூறினார்.
அந்த போலீஸ்காரர் ஒரு வளைவில் திரும்பும்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அது ஒரு உலோக சாலைத் தடுப்பை மோதி விபத்துக்குளானதுn முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்று அவர் சொன்னார்.
அந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணம் செய்த மற்றொரு அதிகாரியும் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி சிறிய காயங்களுக்கு ஆளானார். அவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கோலாலம்பூர் பகுதியில் சட்டவிரோத பந்தய நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக இரு அதிகாரிகளும் கண்காணிப்பை மேற்கொண்டு வந்ததாக அவர் மேலும் கூறினார்.
அமிருல் அய்மான் தனது பயிற்சியை முடித்தது முதல் கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையில் பணியாற்றி வருவதாகவும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அவர் உளவுத்துறை/செயல்பாட்டுப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் சம்சூரி குறிப்பிட்டார்.
இந்த வழக்கு 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.








