ஷா ஆலம், ஜூன் 26- அனுமதியின்றி வேலிகள் மற்றும் பாதுகாப்புச் சாவடிகள் அமைக்கப்பட்டது தொடர்பில் கிள்ளான் வட்டாரத்திலுள்ள மொத்தம் 161 வீடமைப்பு பகுதிகள் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.
இதன் தொடர்பில் தமது துறைக்கு பல்வேறு பொது புகார்கள் வந்துள்ளதாக கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் (எம்.பி.டி.கே.) துணை டத்தோ பண்டார் முகமது ஷாரி அப்பெண்டி முகமது ஆரிப் கூறினார்.
பாதுகாப்பு, பொது இடத்தில் நுழைவதற்கான உரிமை, மற்றும் சட்டத்திற்கு இணங்குதல் தொடர்பான பிரச்சினைகளும் இதில் அடங்கும். அனுமதி காலாவதியான அல்லது வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறிய குடியிருப்பாளர் சங்கங்கள் அமலாக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் என அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட குடியிருப்புகளுக்கு எதிராக நில மற்றும் மாவட்ட அலுவலகம்
எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளில் எழுத்துப்பூர்வ எச்சரிக்கைகளை வழங்குதல், கட்டுமானங்கள் மற்றும் வளாகங்களை இடித்தல் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தல் ஆகியவையும் அடங்கும்.
பொது மக்கள் நலன், சமூக பாதுகாப்பு மற்றும் சீரான வளர்ச்சியைப் பாதுகாக்கும் விஷயத்திலு மாநகர் மன்றம் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று அவர் கூறினார்.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி 13 பகுதிகளுக்கு மட்டுமே கட்டமைப்பை நிறுவ சிறப்பு அனுமதி இருப்பதாகவும் மேலும் 18 பகுதிகளின் விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாகவும் முகமது ஷாரி தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பான வழிகாட்டுதல்கள் 2018 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சங்கங்களின் பதிவாளரிடம் பதிவுசெய்யப்பட்ட குடியிருப்பாளர்கள் சங்கங்கள் மட்டுமே இந்த விண்ணப்பங்களைச் செய்ய முடியும் என்றார் அவர்.








