ஜோகூர் பாரு, ஜூன் 21- பேஸ்புக் வாயிலாக வெளியிடப்பட்ட இணைய முதலீட்டுத் திட்டத்தினால் கவரப்பட்ட ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது சேமிப்புத் தொகையான 535,766 வெள்ளியை இழந்தார்.
இந்த மோசடி தொடர்பில் 57 வயதுடைய ஆடவர் ஒருவரிடமிருந்து தாங்கள் கடந்த வெள்ளிக்கிழமை புகாரைப் பெற்றதாக ஸ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது சோஹாய்மி இஷாக் தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் அதிக லாபத்தை ஈட்டித்தரக்கூடிய இணைய முதலீட்டுத் திட்டம் தொடர்பான விளம்பரத்தை சம்பந்தப்பட்ட நபர் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி கண்டதாக அவர் சொன்னார்.
அந்த விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட அந்நபர் அதன் இணைப்பை அழுத்தியுள்ளார். அதன் பின்னர் அவர் மார்ச் 13 முதல் ஜூன் 5 வரை ஐந்து வங்கி கணக்குகளில் 26 பரிவர்த்தனைகள் மூலம் 535,766 லட்சம் வெள்ளியை செலுத்தியுள்ளார்.
முதலீடு மூலம் கிடைத்த லாபத் தொகையைப் பெறுவதற்கு கூடுதலாக முதலீடு செய்யும்படி அந்த அந்நபர் பணிக்கப்பட்டார். எனினும் அவரால் அந்த கோரிக்கையை நிறைவேற்ற இயலவில்லை என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
காவல் துறையினர் Semak Mule CCID என்ற தளத்தின் வாயிலாக சோதித்த போது அந்த ஐந்து வங்கி கணக்குகளுக்கு எதிராக முதலீட்டு மோசடி தொடர்பில் 22 புகார்கள் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது என்றார் அவர்.
மோசடி தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் இந்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.


