ஜகார்த்தா, ஜூன் 2- இந்தோனேசியாவின் ஆச்சே கடற்பகுதியில் முக்குளிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது உயிரிழந்த மலேசியரின் உடல் ஞாயிற்றுக்கிழமை அவரது தாயகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிலாங்கூரைச் சேர்ந்த 33 வயதான ஹைகால் ராஃபி ஹலிமின் உடல் நேற்று மாலை கோலாலம்பூருக்குக் கொண்டு வரப்பட்டதை மேடானில் உள்ள மலேசியத் தூதரக அதிகாரி ஷஹரில் நிஜாம் அப்துல் மாலேக் உறுதிப்படுத்தினார்.
விமானம் ஆச்சேயில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் மூடா அனைத்துலக விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி மாலை 4.55 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் புறப்பட்டது என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
கடந்த சனிக்கிழமை சபாங்கிற்கு அருகிலுள்ள புலாவ் வேய் கடல்பகுதியில் உள்ள கேன்யன் முக்குளிப்பு தளத்திற்கு அருகே
உள்ளூர் வழிகாட்டியுடன் முக்குளிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்ற மூன்று மலேசிய முக்குளிப்பாளர்களில் ஹைக்கலும் ஒருவராவார்.
வலுவான கடலடி நீரோட்டத்தை எதிர்கொண்ட நிலையில் ஹைக்கால்
பதற்றமடைந்தத் தொடர்ந்து அவர் மேற்பரப்புக்கு வரும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது.
கடலின் மேற்பரப்பை அடைந்தபோது அவர் மயக்கமடைந்து வாயில் நுரை தள்ளியதாகக் கூறப்படுகிறது என்று சபாங் காவல்துறைத் தலைவர் சுகோகோ ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பின்னர் பாதிக்கப்பட்டவர் அதிவிரைவுப் படகு மூலம் இபோய் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சைக்காக சபாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது என அவர் மேலும் கூறினார்.








