சட்டவிரோதமாக வைப்புத் தொகையைப் பெற்றதாக  தங்க வர்த்தக, அந்நிய செலாவணி ஆலோசகர் மீது குற்றச்சாட்டு

20 மே 2025, 9:46 AM
சட்டவிரோதமாக வைப்புத் தொகையைப் பெற்றதாக  தங்க வர்த்தக, அந்நிய செலாவணி ஆலோசகர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மே 20 --  முதலீட்டு நோக்கங்களுக்காக 11 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியை  சட்டவிரோத வைப்புத் தொகையாகப் பெற்றதாக  தங்க வர்த்தகம் மற்றும் அந்நிய செலாவணி ஆலோசகர் ஒருவர் மீது  இங்குள்ள செஷன்ஸ்  நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி அஸ்ருல் டாருஸ் முன்னிலையில் தமக்கெதிராக கொண்டு வரப்பட்டக் குற்றச்சாட்டை 31 வயதான ஏபெல் ஓங் ஜுன் வென் மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 17  முதல்  2023ஆம் ஆண்டு மார்ச் 15  வரையிலான காலக்கட்டத்தில்  செந்தூல்,  தாமான் செந்தூல் பஹாகியாவில் உள்ள ஒரு வீட்டில் 2013ஆம் ஆண்டு நிதிச் சேவைகள் சட்டத்தின்  10வது பிரிவின்  கீழ் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் நிதி ஆலோசகர் டான் வாய் மெய் (வயது 40) என்பவரிடமிருந்து பணத்தைப் பெற்றதாக  ஏபெல் ஓங் ஜுன் வென் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை  சிறைத்தண்டனை அல்லது 5 கோடி வெள்ளிக்கும் மிகாத அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2013ஆம்  ஆண்டு நிதிச் சேவைச் சட்டத்தின்  137 (1) வது பிரிவு  மற்றும் அதே சட்டத்தின் 137 (2)வது பிரிவின்  கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

அரசு தரப்பு கோரியபடி  குற்றம் சாட்டப்பட்டவரை  30,000 வெள்ளி  ஜாமீனில் விடுவிக்க அனுமதி   வழங்கிய நீதிபதி அஸ்ருல் டாருஸ், மாதத்திற்கு ஒரு முறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டதோடு  வழக்கை ஜூன் 24 ஆம் தேதிக்கு  ஒத்தி வைத்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.