கோலாலம்பூர், ஏப். 26- உலகளாவிய சவால்கள் காரணமாக மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கே.டி.என்.கே.) வளர்ச்சி விகிதம் இவ்வாண்டு 3.9 விழுக்காடாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
சாத்தியமான அனைத்து தடைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நாங்கள் (உலக வங்கி) மலேசியாவின் 2025 வளர்ச்சி விகிதத்தை 3.9 விழுக்காடாக மதிப்பிடுகிறோம் என்று உலக வங்கியின் மலேசியாவிற்கான தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் அபூர்வா சங்கி, @ApurvaSanghi என்ற எக்ஸ் தளக் கணக்கில் வெளியிட்ட ஒரு பதிவில்
கூறினார்.
இதர ஆசியான் நாடுகளுக்கான வளர்ச்சி கணிப்புகளையும் உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8 சதவீதம் என்ற நிலையில் வியட்நாம் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்தோனேசியா (4.7 சதவீதம்), பிலிப்பைன்ஸ் (5.3 சதவீதம்), கம்போடியா (4.0 சதவீதம்) மற்றும் தாய்லாந்து (1.6 சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளன கூடுதலாக, சீனாவின் வளர்ச்சி விகிதத்திற்கான கணிப்பு 4.0 விழுக்காடாக உள்ளது.
தற்போது 4.5 முதல் 5.5 விழுக்காடு வரை இலக்காகக் கொண்ட மலேசியாவின் 2025 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பு, அமெரிக்காவின் வரித் தாக்கத்தால் கீழ்நோக்கி திருத்தப்பட வேண்டியிருக்கலாம் என்று பேங்க் நெகாரா கவர்னர் டத்தோஸ்ரீ அப்துல் ரஷீட் கஃபூர் நேற்று கூறியிருந்தார்.
எனினும், தற்போதைக்கு உறுதியான முன்னேற்றங்கள் எதுவும் இல்லாததால் இத்திட்டத்தை சரிசெய்வதில் பேங்க் நெகாரா அவசரப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
"கொள்கை மாற்றங்களுக்கு மத்தியில் ஒரு முக்கியமான சந்திப்பு" என்ற தலைப்பில் ஏப்ரல் 2025 உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையை ஐ.எம்.எஃப். எனப்படும் அனைத்துலக நிதியகம் கடந்த புதற்கிழமை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், இப்பிராந்தியம் முழுவதும் நிலவும் கணிப்புகளின் சரிவுக்கு ஏற்ப 2025 ஆம் ஆண்டிற்கான மலேசியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை 4.7 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாக அது குறைத்தது.








