தாப்பா, ஏப். 26- ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று காலை 8.00 மணிக்கு 63 வாக்குச் சாவடிகளை உள்ளடக்கிய 19வாக்களிப்பு மையங்கள் திறக்கப் பட்டன.
அந்த 19 வாக்கு மையங்களில் 18 சாவடிகள் மாலை 6.00 மணிக்கு மூடப்படும் வேளையில் தோ தென்டேவா சக்தி வாக்குச் சாவடியில் மட்டும் மாலை 4.00 மணியுடன் வாக்களிப்பு நிறுத்தப்படும்.
ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இன்று இரவு 9.00 மணியளவில் வெளிவரும் என்று தேர்தல் ஆணையம் (எஸ்.பி ஆர்.) எதிர்பார்க்கிறது.
ஆயர் கூனிங் தொகுதியில் திறக்கப்பட்டுள்ள 19 வாக்குச் சாவடிகளில் போலீஸ்காரர்கள் உட்பட மொத்தம் 601 பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இத்தொகுதியில் உள்ள மொத்தம் 31,281 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் இன்று தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவர்.
இத்தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் டாக்டர் முகமது யுஸ்ரி பக்கிர், பெரிக்கத்தான் சார்பில் முகமது முமைமின் மலேக், மலேசிய சோசலிச கட்சியின் சார்பில் பவானி கேஎஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த இடைத் தேர்தலை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை
நடைபெற்ற தொடக்கக்கட்ட வாக்களிப்பில் போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களின் துணைவியரை உட்படுத்திய தகுதியுள்ள 500 வாக்காளர்களில்
93.4 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
இந்த தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் பணியில் 601
தேர்தல் ஆணையப் பணியாளர்களும் 1,114 போலீசாரும் ஈடுபடுவர்.
இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இஸ்ஹாம் ஷாருடின் கடந்த
பிப்ரவரி 22ஆம் தேதி மாரடைப்பு காரணமாகக் காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.



