புத்ராஜெயா, ஏப். 14- ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் பிரசாரத்தின் போது அரசாங்க இயந்திரம் மற்றும் நிதியை பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்துத் தரப்பினருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவானது. வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி வாக்களிக்கும் நாள் வரை அரசாங்க இயந்திங்களும் நிதி ஒதுக்கீடும் பயன்படுத்தப்படுவது ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்று நிதியமைச்சருமான அவர் சொன்னார்.
ஆயர்கூனிங் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் 61 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி செலவிலான 33 மேம்பாட்டுத் திட்டங்களின் அமலாக்கம் தொடர்பான வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் அறிவிப்பு வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்பு வெளியிடப்பட்டது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
அந்த அறிவிப்பு வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்பு வெளியிடப்பட்டது. வேட்பு மனுத்தாக்கலுக்குப் பின்னர் வெளியிடப்பட்டிருந்தால் நாங்கள் நிச்சயம் எச்சரிக்கை விடுத்திருப்போம். அனுமதியும் வழங்கியிருக்க மாட்டோம் என்று அவர் சொன்னார்.
செந்தோஹான் காசே 3.0 முன்னெடுப்பின் கீழ் 33 அடிப்படை வசதித் திட்டங்களை அமல்படுத்துவதற்கு 61 லட்சத்து 30ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கந்த ஏப்ரல் 10ஆம் தேதி கூறியிருந்தார்.








