கோலாலம்பூர், ஏப். 12- பராமரிப்பில் உள்ள பிள்ளைகள் தவறாக நடத்தப்படுவதாகச் சித்தரிக்கும் காணொளி சமீபத்தில் வைரலானதைத் தொடர்ந்து செராஸில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த 12 சிறுவர்கள் மற்றும் ஆறு சிறுமிகள் அடங்கிய 18 பேர் மீட்கப்பட்டதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு அறிவித்தது.
அந்த மையத்திலிருந்த சிறார்கள் சுகாதார பரிசோதனைக்காக காஜாங் மருத்துவமனைக்கும் பின்னர் ஆரம்ப பரிசோதனை செயல்முறைக்காக உலு லங்காட் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக அது கூறியது.
சிலாங்கூர் சமூக நலத்துறை (ஜே.கே.எம்), உலு லங்காட் பி.கே.எம்.டி மற்றும் காவல்துறையினர் நேற்று அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த ஆய்வைத் தொடர்ந்து மையத்தைச் சேர்ந்த இரண்டு பாதுகாவலர்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக காஜாங் மாவட்ட காவல் தலைமையகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் என்று அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
இந்த சம்பவத்தை அமைச்சு கடுமையாகக் கருதுகிறது. மேலும் நியமனம் பெற்றவர் சமூக நலத் துறையின் வழியாக நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து சம்பந்தப்பட்ட சிறார்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என அது குறிப்பிட்டது.








