ஈப்போ, ஏப். 6- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 264வது கிலோ மீட்டரில் மெனோரா சுரங்கப் பாதை அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பில் சிவப்பு வாகனத்தின் ஓட்டுநரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அந்த வாகனமோட்டியிடம் இங்குள்ள ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஜைனால் அபிடின் அபாங் அகமது கூறினார்.
இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வாகனமோட்டியின் தொடர்பு குறித்து இந்த விசாரணையில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இதனிடையே, இவ்விபத்தில் பலியான பெண்மணியின் கணவரான பெரேடுவா பெஸா காரின் ஓட்டுநர் இவ்விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என்று அவர் சொன்னார்.
அவ்வாடவரின் வாயில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளதால் அவரால் பேசவும் இயலவில்லை. அவர் தற்போது தஞ்சோங் மாலிமில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார் என்றார் அவர்.
இந்த விபத்தில் பலியான பெண்ணின் நகைகள் காணாமல் போனது தொடர்பில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் நேற்று முன்தினம் இரவு போலீசில் புகார் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.
அக்குடும்பத்தினர் பயணம் செய்த கார் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 264வது கிலோ மீட்டரில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் எட்டு மாதக் கர்ப்பிணியான நுர் ஃபாத்திஹா பட்ருள் ஹிஷாம் (வயது 25) மற்றும் அவரின் இரண்டு வயது மகள் ஆகியோர் உயிரிழந்தனர்.








