மண்டலே (மியான்மர்), மார்ச் 29- மியான்மர் நாட்டின் மண்டலே மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,002 பேராக உயர்ந்துள்ளது.
மேலும் இந்த இயற்கைப் பேரிடரில் 2,376 பேர் காயமடைந்ததோடு 30 பேர் காணாமல் போயுள்ளதாக மியான்மர் தேசிய நிர்வாக மன்றத்தின் தகவல் பிரிவை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 7.7 எனப் பதிவான நிலநடுக்கம் நேற்று நாட்டையே உலுக்கியதாக அந்நாட்டு தகவல் பிரிவு தெரிவித்தது.
நிலநடுக்கம் காரணமாக மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளும் சீராக செயல்படவில்லை. மேலும் யாங்கோனில் சில பகுதிகளில் கைப்பேசிக்கான சிக்னலும் கிடைக்கவில்லை. இந்தப் பேரிடரில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன








