ஜோகூர் பாரு, மார்ச் 26- வெள்ளம் காரணமாக ஜோகூர் மாநிலத்தில் உள்ள தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 275 குடும்பங்களைச் சேர்ந்த 909 பேர் ஆக பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் பத்து பஹாட் மற்றும் பொந்தியான் ஆகிய இரண்டு மாவட்டங்களில் செயல்படும் 10 வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி தெரிவித்தார்.
பத்து பஹாட் மாவட்டத்தில் 193 குடும்பங்களைச் சேர்ந்த 619 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் பொந்தியான் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82 குடும்பங்களைச் சேர்ந்த 290 பேராக உள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
பொந்தியானில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் வேளையில் மாநிலத்தில் உள்ள இதர ஒன்பது மாவட்டங்களில் வானிலை தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.


