காஜாங், மார்ச் 26- இம்மாதம் 24 முதல் 31 வரை மாநிலத்திலுள்ள 65
இடங்களில் ஜூவாலான் ரஹ்மா மடாணி மலிவு விற்பனையை உள்நாட்டு
வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (கே.பி.டி.என்.)
சிலாங்கூர் மாநிலப் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளின் போது
பொது மக்கள் நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருள்களை
வாங்குவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த மலிவு விற்பனைத் திட்டம்
அமல்படுத்தப்படுவதாக பயனீட்டாளர் விவகாரங்களுக்கான மாநில
ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் கூறினார்.
டின்களில் அடைக்கப்பட்ட உலர்ந்த மற்றும் உணவுப் பொருள்கள்
அடங்கிய 31 வகை பொருள்கள் இந்த விற்பனையில் இடம் பெறும் என்று
அவர் சொன்னார்.
இந்த விற்பனையில் கலந்து கொள்வதன் மூலம் பொது மக்கள் சந்தையை
விட 10 முதல் 15 விழுக்காடு குறைவான விலையில் பொருள்களை
வாங்க முடியும். இந்த விற்பனை பெரும்பாலும் பேரங்காடிகளில்
நடைபெறும். சில இடங்களில் வெளிப்புறங்களில் திறக்கப்படும் அங்காடிக்
கடைகளில் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
நேற்று இங்குள்ள எக்கோன்சேவ் பேரங்காடியில் 2025 நோன்புப் பெருநாள்
விலை உச்சவரம்புத் திட்ட அமலாக்க சோதனையை மேற்கொண்டப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அஸ்னாஃப் எனப்படும் பேறு குறைந்த 20 பேருக்கு ரிஸாம் தலா 200 வெள்ளி மதிப்பிலான பற்றுச் சீட்டுகளை வழங்கினார்.
இதனிடையே, மாநிலம் முழுவதும் உள்ள ரமலான் சந்தைகளில் பொருள் அதிக விலையில் விற்கப்படும் சம்பவங்கள் கண்டறியப்படவில்லை என்று மாநில கே.பி.டி.என். இயக்குநர் முகமது ஜூஹாரி ராடே கூறினார்.


