காஜாங், மார்ச் 26- நோன்புப் பெருநாளை முன்னிட்டு சாலைகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக 71 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 646 உறுப்பினர்களை சிலாங்கூர் மாநில காவல்துறை நியமித்துள்ளது.
கடுமையான நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் 18 இடங்களில் 49 போலீஸ் ரோந்து வாகனப் பிரிவினரும் மோட்டார் சைக்கிள் ரோந்து பிரிவின் 87 உறுப்பினர்களும் பணியில் ஈடுபடுவார்கள் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை, கோம்பாக் டோல் சாவடி, ஜாலான் கிளாங்-தெலுக் இந்தான், ஜாலான் கோல சிலாங்கூர்-ரவாங் மற்றும் சுங்கை பீசி டோல் சாவடி ஆகியவை கூடுதல் கவனம் செலுத்தப்படும் இடங்களில் அடங்கும் என்று அவர் கூறினார்.
நோன்புப் பெருநாளின்போது 16 லட்சம் வாகனங்கள் மாநிலத்திற்குள்
நுழையும் மற்றும் வெளியேறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் நேற்று காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலையில் உள்ள காஜாங் செலாத்தான் டோல் சாவடியில் சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிலாங்கூர் மாநில சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குநர் அஸ்ரின் போர்ஹானும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதனிடையே, கடந்த சனிக்கிழமை கோத்தா டாமன்சாராவில் உள்ள ஒரு நகைக்கடையில் நிகழ்ந்த கொள்ளை குறித்து கேட்கப்பட்ட போது, அதன் தொடர்பான விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக ஹூசேன் கூறினார்.
சாட்சிகள் மற்றும் சந்தேக நபர் உட்பட 12 பேரின் வாக்குமூலங்களை போலீசார் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சந்தேக நபர் ஒரு அத்தியாவசிய பயன்பாட்டு நிறுவனத்தில் போலீஸ் பந்துவான எனப்படும் உதவி போலீஸ்காரராக பணி புரிந்து வந்தார்.


