ஷா ஆலம், மார்ச் 23 - சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்படுவவதைத் தடுக்க அத்தகையச் செயல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் 507 கண்காணிப்பு கேமராக்களை (சி.சி.டி.வி.) நிறுவுவதன் மூலம் கிள்ளான் அரச மாநகர் மன்றம் (எம் பி.டி.கே.) கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் இதுபோன்றச் செயல்களுக்கு பொறுப்பானவர்கள் உரிய நடவடிக்கையை எதிர்கொள்வதை உறுதி செய்வதற்கும் இந்த கேமராக்கள் பயனுள்ள அணுகுமுறையாக விளங்குகின்றன என்று கிள்ளான் டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமீட் ஹூசேன் கூறினார்.
கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ள கைவிடப்பட்டச் சாலைகள், பின்புற வழிகள் மற்றும் ஒதுக்குப்புற பகுதிகளில் வெளியாட்கள் டன் கணக்கில் மொத்தக் கழிவுகளைக் கொட்டுகிறார்கள். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் நாம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது என்று அவர் கூறியதாக தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
கட்டுமானக் குப்பைகள், சேதமடைந்த தளவாடங்கள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவை சட்டவிரோத குப்பைகளில் அடங்கும் என்று நேற்று நடைபெற்ற மாநகர் மற்ற ஊழியர்களுடனான நோன்பு துறப்பு நிகழ்வில் ஹமீட் கூறினார்.
ஆகவே, இதற்கு பொறுப்பானவர்களைக் கைது செய்வது உட்பட இந்தப் பிரச்சினைகளை விரிவாகக் கையாள வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கிள்ளான் நகரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பொறுப்பற்ற நபர்களைப் பிடிக்க சி.சி.டி.வி. பயன்பாட்டை மேம்படுத்த வேண்டிய நேரம் இது என்று ஹமீட் தெரிவித்தார்.








