ANTARABANGSA

காஸாவில் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் -  மலேசியா கண்டனம்

19 மார்ச் 2025, 4:05 AM
காஸாவில் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் -  மலேசியா கண்டனம்

நிபோங் திபால், மார்ச் 19 - காஸா மீதான   இஸ்ரேலின் அண்மையத்  தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டிப்பதாக  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு மாநாட்டு அமைப்பு , ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐ.நா. பாதுகாப்பு மன்றம் போன்ற அனைத்துலக  தளங்களில் தலைமைத்துவ பங்கேற்புகள் மூலம் மலேசியா தனது எதிர்ப்பை   தொடர்ந்து  சமர்ப்பிக்கும் என்று அவர் கூறினார்.

காஸாவிற்கு மனிதாபிமான மற்றும் அடிப்படை  உதவிகளை மலேசியா தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

போர் நிறுத்த முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்ட போதிலும் கடந்த  ஒன்றரை ஆண்டுகளாகத் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  வெறும் போர் நிறுத்தத்தில் எங்களுக்கு  உடன்பாடில்லை. காஸாவில் பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட பாலஸ்தீனர்களுக்கு எதிரான மிருகத்தனமான தாக்குதல்கள் முழுமையாக நிறுத்துவதே தற்போதைய  தேவையாகும் என அவர் சொன்னார்..

அமைதிக்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று  வருகின்றன. ஆனால் கொலைகளும்  தொடர்கின்றன.  உலகளாவிய பாதுகாப்பு   அமைப்பு முறை உடைந்திருப்பதையும் வன்முறை தொடர அனுமதிக்கப்படுவதையும்  அது

தெளிவாகக் காட்டுகிறது.

இந்த புனித ரமலான் மாதத்தில் மனிதாபிமான உணர்வு இல்லாதது உண்மையிலேயே வருந்தத்தக்கது என்று அவர் சொன்னார்.

நேற்றிரவு பண்டார் தாசேக் முத்தியாராவில் உள்ள அபு உபைடா இப்னி அல்-ஜர்ரா பள்ளிவாசலில்  பினாங்கு மாநில  நிலையிலான மடாணி இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைக்  கூறினார்.

இஸ்ரேலியப் படைகள் நேற்று  அதிகாலை காஸா பகுதியில் தாக்குதலைத் தொடங்கியதாக அனடோலு ஏஜென்சியின் அறிக்கை கூறுகிறது.

போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் இருந்த நிலையிலும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 320 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.