ஜோர்ஜ் டவுன், மார்ச் 17- இங்குள்ள ஜாலான் பந்தாயில் உள்ள இரு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியின் போது இரு தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஒரு தீயணைப்பாளருக்கு காயம் ஏற்பட்ட வேளையில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்த தீ விபத்து தொடர்பில் நேற்று மாலை 3.07 மணிக்கு தனது துறைக்கு தகவல் கிடைத்தாக பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குனர் எண்டி ஷெரிமி முகமது அஸ்மி கூறினார்.
சம்பவ இடத்தை அடைந்த போது இரு தொழிற்சாலைகள் மற்றும் திருமண ஏற்பாடு முகவர் கடை உள்ளிட்ட மூன்று வளாகங்களில் தீ ஏற்பட்டுள்ளதை தீயணைப்பாளர்கள் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தீயணைப்பு நடவடிக்கையின் போது இரு தன்னார்வ தீயணைப்பாளர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் நீர் பாய்ச்சும் குழாயில் சிக்கியதால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றொருவர் தீயை அணைக்கும் பணியின் போது விழுந்த இரும்பைத் தவிர்க்க முயன்ற போது காயங்களுக்குள்ளானார் என்றார் அவர்
காயமடைந்த இரு தீயணைப்பாளர்களும் சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் மேலும் சொன்னார்.
சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள தீயணைப்பு குழாய்களில் நீர் அழுத்தம் குறைவாக இருந்ததால் தீயை அணைப்பதில் தாங்கள் சிரமத்தை எதிர் நோக்கியதாகக் கூறிய அவர், தீயணைப்புத் துறையின் டேங்கர் லோரி மூலம் கொண்டு வரப்பட்ட 10,000 லிட்டர் நீரைக் கொண்டு தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது என்றார்.
இந்த தீ விபத்தில் அந்த வர்த்தக வளாகங்கள் 80 விழுக்காடு தீயில் அழிந்ததாகவும் இரவு 7.30 மணி வரை தீயை முழுமையாக அணைக்கும் பணிகள் மேற்கொள்ள பட்டதாகவும் அவர் சொன்னார்.
இந்த தீவிபத்துக்கான காரணம் மற்றும் சேதமதிப் ஆராயப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இந்த விபத்தில் தொழிற்சாலை ஊழியர்கள் உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றார்.


