கோல திரங்கானு, மார்ச் 17 - இங்குள்ள பெசூட்டில் நேற்று அதிகாலை நிகழ்ந்த சம்பவம் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கிளந்தான், பாசீர் பூத்தே வட்டாரத்தைச் சேர்ந்த அந்த 31 வயது நபர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், குற்றவியல் அச்சுறுத்தல், வழிப்பறி, திருட்டு, ஆயுதம் ஏந்திய கொள்ளை உள்ளிட்ட ஏழு குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளார் என்று திரங்கானு மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது கைரி கைருடின் கூறினார்.
நேற்று அதிகாலை 2.20 மணியளவில் பெசூட் அரச மலேசிய விமானப்படையின் கோங் கெடாக் விமான தளத்தில் 'ஓப் லாராஸ்' நடவடிக்கையின் கீழ் ரோந்துப் பணிகளை மேற்கொண்டிருந்த புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள், ஃபோர்டு ரேஞ்சர் நான்கு சக்கர வாகனம் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் பயணிப்பதைக் கண்டதாக அவர் கூறினார்.
அந்த வாகனத்தை சோதனைக்காக நிறுத்த முயன்றபோது சந்தேக நபர் திடீரென காவல்துறையினரை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
போலீசாரும் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு பதிலுக்குத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். எதிர்முனையில் இருந்து துப்பாக்கிச் சூடு எதுவும் நடக்காத வரை இந்த தாக்குதல் தொடர்ந்தது.
பின்னர் அந்த வாகனத்தை ஆய்வு செய்த போலீசார் சந்தேக நபர் அதில் இறந்து கிடப்பதைக் கண்டனர் என்று திரங்கானு காவல் துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கைரி கூறினார்.
மேலும் சோதனை செய்த போது வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையின் தரைப் பகுதியில் ஒரு பழுப்பு நிற கைத்துப்பாக்கி, தோட்டா உறை மற்றும் பல தோட்டாக்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், ஒரு கருப்பு பொட்டலத்தில் போதை மாத்திரை மற்றும் ஷாபு போதைப் பொருள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு 29,000 வெள்ளி என மதிப்பிடப் பட்டுகிறது என அவர் குறிப்பிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 14) சிலாங்கூர், சிப்பாங்கில் உள்ள டேசா விஸ்டாவில் மூன்று வெளிநாட்டு குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் இந்த வழக்கு தொடர்புடையது அல்ல என்றும் அவர் விளக்கினார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடிய தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று கைரி பொதுமக்களை வலியுறுத்தினார்.


