சுக்காய், மார்ச் 17- இல்லாத இணைய வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கிய குடும்ப மாது ஒருவர் 50,500 வெள்ளியை இழந்தார்.
நாற்பத்தேழு வயதான அந்த குடும்ப மாது இண்ட்ஸ்டாகிராம் செயலியில் கடந்த 3ஆம் தேதி வெளிவந்த பகுதி நேர வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தைக் கண்டதாக கெமமான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ராஸி ரோஸ்லி கூறினார்.
அந்த வேலை வாய்ப்பு தொடர்பில் கூடுதல் விபரங்கள் பெறுவதற்காக அந்த குடும்பமாது சந்தேக நபரான பெண்மணி ஒருவரை புலனம் வாயிலாக தொடர்பு கொண்டதாக அவர் தெரிவித்தார்.
சில ஹோட்டல்களில் இணையம் வழி செய்யப்பட்ட முன்பதிவுக்கு கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் இந்த பணிக்கு நான்கு முதல் 10 விழுக்காடு வரை கமிஷன் வழங்கப்படும் என்றும் அந்த மாதுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கமிஷன் தொகையால் கவரப்பட்ட அந்த மாது கடந்த மார்ச் 5 முதல் 15ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 24 பரிவர்த்தனைகள் மூலம் 50,500 வெள்ளியை செலுத்தியுள்ளார் என ராஸி ரோஸ்லி கூறினார்.
எனினும், வாக்குறுதியளிக்கப்பட்ட படி எந்த கமிஷன் தொகையும் கிடைக்காததைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை அந்த மாது உணர்ந்துள்ளார் என்றார் அவர்.
இந்த மோசடி தொடர்பில் அவர் இங்குள்ள சுக்காய் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை புகார் செய்ததாகக் கூறிய அவர், இப்புகார் குறித்து குற்றவியல் சட்டத்தின் 240வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.


