MEDIA STATEMENT

இனவாதச்  செயல்களால் நாட்டின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்க வேண்டாம்- குணராஜ்

10 மார்ச் 2025, 5:20 PM
இனவாதச்  செயல்களால் நாட்டின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்க வேண்டாம்- குணராஜ்

கிள்ளான், மார்ச்- 10- நாட்டின் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு இனவாத சினமூட்டல் செயல்களையும்  ஒருபோதும் அனுமதிக்க  வேண்டாம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ்  வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் அமைதி காத்து  அதிகாரிகள்  விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க இடம் கொடுக்குமாறு தாம் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.

எந்தவொரு தரப்பும் நிலைமையை மோசமாக்கும் வகையிலான அறிக்கைகளால்  பிரச்சினையை மேலும் தூண்ட முயற்சிக்க வேண்டாம். சட்டம் யாருடைய தலையீடும் இன்றி தன்னிச்சையாகச் செயல்பட அனுமதிப்போம் என அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு இன ரீதியிலான சினமூட்டும் செயல்களையும்  நிராகரித்து ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வலுவான அறிக்கையை நான் வரவேற்கிறேன்.

மலேசியா ஒன்றுபட்ட, பல இன மற்றும் பரஸ்பர மரியாதை கொண்ட நாடாக இருப்பதை உறுதி செய்வதில் அவரது அர்ப்பணிப்புக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும்.

நாட்டின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பேண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதில் அக்கறையுடனும் உறுதியுடன் இருக்கும் உள்துறை அமைச்சருக்கும் எனது  பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேசமயம், இந்த இன சீண்டல்  விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த தேசிய போலீஸ்படைத் தலைவரையும் நான் பாராட்டுகிறேன். உடனடி நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் காட்டிய  தீவிரத்தன்மை பெரிதும் போற்றுதலுக்குரியது. மலேசிய மக்களின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு தரப்பினருக்கும் இது ஒரு வலுவான எச்சரிக்கையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இருப்பினும்,  ஜம்ரி வினோத்  போன்ற நபர்களின் சினமூட்டும் உள்ளடக்கத்தை மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம்  அகற்றிய போதிலும் மீண்டும் துணிச்சலுடன் அத்தகைய பதிவுகளை அவர் பதிவேற்றம் செய்து வருகிறார். இத்தகையச் செயல் தேசிய நல்லிணக்கத்திற்கு ஒரு வகையான சவாலாகும், அதைத் தொடர  நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது

எனவே, வேண்டுமென்றே இனப் பதற்றத்தைத் தூண்டி நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் எந்தவொரு தனி நபருக்கும் எதிராக உறுதியான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன். தேசிய ஒற்றுமை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது.

மலேசியா பல இன மற்றும் பல மதங்களைக் கொண்ட நாடு. இத்தனை காலம் நாம் அனுபவித்து வந்த நல்லிணக்கம் பேணப்பட வேண்டும். எனவே, அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன் என்று குணராஜ் அறிக்கை ஒன்றில் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.