கோலாலம்பூர், மார்ச் 7 - பெண் தொழில்முனைவோரிடையே இலக்கவியல் தொழில்நுட்பம் பயன்படுத்துவதை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுடனான தீவிர ஒத்துழைப்பை உருவாக்க இலக்கவியல் அமைச்சு எண்ணம் கொண்டுள்ளது.
இதுவரை, 220,000 பெண் தொழில்முனைவோரில் 12.63 விழுக்காட்டினர் மட்டுமே மின்னியல் வணிகத் தளத்தில் தொடக்கக் கட்ட பயிற்சியைப் பெற்றுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
2025 இலக்கவியல் EmpowerHER திட்டத்தைத் கோலாலம்பூரில் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
இணையம் வழி வியாபாரம் செய்யும் ஏறத்தாழ 57,000 பெண் வர்த்தகர்கள் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியவில்லை என்றும், அவர்களில் பெரும்பாலானோர் ஆயிரம் ரிங்கிட்டிற்கும் குறைவாகவே சம்பாதித்திப்பதாகவும் கோபிந்த் கூறினார்.
இதனிடையே, இலக்கவியல் திறன் கொண்ட B40 பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், வருமானத்தை ஈட்டவும், இலக்கவியல் பொருளாதாரத்தில் நிலையான வணிகங்களுக்கான சந்தை அணுகலை உருவாக்குவதையும் இந்த இலக்கவியல் EmpowerHER திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் விவரித்தார்.


