MEDIA STATEMENT

பள்ளி அருகே சாலையை கடக்கும்போது வாகனம் மோதியது- 10 வயது மாணவர் காயம்

1 மார்ச் 2025, 1:54 PM
பள்ளி அருகே சாலையை கடக்கும்போது வாகனம் மோதியது- 10 வயது மாணவர் காயம்

கோலாலம்பூர், மார்ச் 1- சிலாங்கூர், சுபாங் பெஸ்தாரி, ஜாலான் பெர்சியாரான் ஃபாஜாரில் உள்ள  பள்ளிக்கு அருகே நேற்று பிற்பகல் 12.15 மணியளவில்  சாலையைக் கடக்கும்போது விளையாட்டு பயன்பாட்டு வாகனம் (எஸ்.யு.வி.) மோதி  மாணவர் ஒருவர் காயமடைந்தார்.

அப்பகுதியில்   போக்குவரத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த ரேலா உறுப்பினரின் உத்தரவை மீறிச் சென்ற வாகனத்தால் அந்த  10 வயது  மாணவர்  மோதப்பட்டதாக சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன்  முகமது ஹபீஸ் முகமது நோர் தெரிவித்தார்.

இந்த விபத்தின் காரணமாக   இடது கன்னத்தில் காயங்களுக்குள்ளான அந்த மாணவர்  அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் நடந்து சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு   அந்த எஸ்.யு.வி. வாகனத்தின்  ஓட்டுநரான 66 வயது நபர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

அதே சமயம், இந்த விபத்து தொடர்பில் வாக்குமூலம் அளிக்க பணியில் இருந்த ரேலா உறுப்பினர் அழைக்கப்பட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்படுவதற்கும்  இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும்  இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க காவல்துறையினர் பள்ளி நிர்வாகத்தை அழைப்பார்கள் என்று முகமது ஹபீஸ் கூறினார்.

இந்த வழக்கு 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 43(1) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்த தகவல் தெரிந்த பொதுமக்கள் இன்ஸ்பெக்டர் சே ஹசான் அம்போக்கை 013-394 0423 என்ற எண்ணில் அல்லது சுங்கை பூலோ மாவட்ட காவல் தலைமையக செயல்பாட்டு அறையை 03-61561222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.