MEDIA STATEMENT

கல்லூரி மாணவர் கொலை வழக்கு- எதிர்வாதம் செய்ய 13 மாணவர்களுக்கு உத்தரவு

28 பிப்ரவரி 2025, 7:47 AM
கல்லூரி மாணவர் கொலை வழக்கு- எதிர்வாதம் செய்ய 13 மாணவர்களுக்கு உத்தரவு

தாவாவ், பிப். 28- லஹாட் டத்து தொழில்திறன் பயிற்சி  கல்லூரி மாணவரான முகமது நஸ்மி ஐசாட் முகமது நருல் அஸ்வானை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள  அதே கல்லூரியைச் சேர்ந்த   13 மாணவர்களை எதிர்வாதம் செய்ய இங்குள்ள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிரான குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் உள்ளதை   அரசு தரப்பு வெற்றிகரமாக நிரூபித்ததைத் தொடர்ந்து  நீதிபதி டத்தோ டங்கன் சிகோடோல் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

வழக்கு விசாரணையின்  முழுவதும் சாட்சிகள் அளித்த  சாட்சியங்களை ஆராய்ந்து மதிப்பீடு செய்த பிறகு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற்காப்பு வாதம் புரிய  நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தற்காப்பு வாதம் புரிய  நீதிபதி வரும் மார்ச் 10 முதல் 14 வரை தேதி நிர்ணயித்தார்.

கடந்தாண்டு  மார்ச்  21ஆம் தேதி இரவு 9.00 மணி  முதல் மறுநாள் காலை 7.38 மணி  வரையிலான காலக்கட்டத்தில் லஹாட் டத்து தொழில் திறன் கல்லூரியின் 7வது ரெசாக் மற்றும் 5வது பெலியன் விடுதி அறைகளில் 17 வயதான முகமது நஸ்மி ஐசாட்டை கொலை செய்ததாக 16 முதல் 19 வயதுக்குட்பட்ட மொத்தம் 13 மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும்  தண்டனைச் சட்டத்தின்  302 மற்றும்  34 வது பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.  இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படிகள் வரை வழங்கப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.