கோத்தா திங்கி, பிப். 21- வர்த்தக ஊக்குவிப்புகளை மேம்படுத்தும் நோக்கில் மலேசியா-கம்போடியா கூட்டு வர்த்தகக் குழுவை (ஜே.டி.சி.) அமைக்கும் பரிந்துரை குறித்து மலேசியாவும் கம்போடியாவும் விவாதித்துள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தொங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையே முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஏற்றத் தளமாக இந்த கூட்டு வர்த்தகக் குழு விளங்கும் என்று அவர் சொன்னார்.
டேசாருவில் நடைபெற்ற 31வது ஆசியான் பொருளாதார அமைச்சர்கள் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றுள்ள கம்போடிய வர்த்தக அமைச்சர் சாம் நிமுலுடன் இன்று சந்திப்பு நடத்தியப் பின்னர் தனது எக்ஸ் தளத்தில் இந்த தகவலை ஸப்ருள் வெளியிட்டுள்ளார்.
வர்த்தக மற்றும் முதலீடு அதிகரிப்பு, பல்வேறு துறைகளை உட்படுத்திய திட்டங்களில் ஒத்துழைப்பு மேம்பாடுகள் மூலம் மலேசியாவும் கம்போடியாவும் வலுவான பொருளார ஒத்துழைப்பை பேணி வருவதாக அவர் சொன்னார்.
கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் வர்த்தக அளவு 40 விழுக்காடு அதிகரித்து 19.1 கோடி அமெரிக்க டாலரை (86 கோடி வெள்ளி) எட்டியது.
மலேசியாவுக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகம் அபரிமித வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதை இது பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.


