காஜாங் பிப். 28- பண்டார் ஸ்ரீ புத்ரா இடைநிலைப்பள்ளியில் தமிழ் மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தை எடுப்பதில் பள்ளி நிர்வாகத்தின் தடைக்குச் சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது.
இப்பள்ளியில் முழு நேர தமிழ் ஆசிரியர் இல்லாத பட்சத்தில் நான்கு மாணவர்கள் தமிழ் மொழிப் பாடத்தைப் பிரத்தியேக வகுப்பில் படிவம் 1 முதல் படிவம் 5 வரை கற்று வருகின்றனர்.
இம்மாணவர்கள் அனைவரும் பாங்கி தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கியவர்கள் ஆவர்.
கடந்த திங்களன்று பள்ளியில் எஸ்.பி.எம் பாடங்களின் பதிவு நடைபெற்ற போது,தமிழ்மொழி பாடத்திற்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை அறிந்த, சுங்கை ரமால் சட்டமன்ற இந்தியர்களின் பிரதிநிதி திரு.சிவக்குமார் மற்றும் இடைநிலைப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர் திரு.சு.உதயசூரியன் அவர்களும் பிள்ளைக்கு ச் சென்று பள்ளி முதல்வர் புவான் வான்நோர்மாவைச் சந்தித்துப் பேசி இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.பள்ளி முதல்வர் நான்கு மாணவர்களும் தமிழ் மொழிப்பாடத்தை எடுக்க சம்மதம் தெரிவித்தார்.
இவ்விவகாரம் சுமூகமாக தீர்வு காண்பதற்கு,சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவு உதவி இயக்குநர் உயர்திரு வீ.செங்குட்டுவன் அவர்களின் தலையீடும் ஒத்துழைப்பும் இதற்குப் பெருந்துணையாக அமைந்தது என்று தெரிவிக்கப்பட்டது.


