MEDIA STATEMENT

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்தது- ஆறாம் படிவ மாணவி மரணம்

28 பிப்ரவரி 2025, 4:25 AM
கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்தது- ஆறாம் படிவ மாணவி மரணம்

கோத்தா திங்கி, பிப். 28- கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்ததில் அக்காரை ஓட்டிச் சென்ற ஆறாம் படிவ மாணவி உயிரிழந்தார். இச்சம்பவம் ஜாலான் லொக் ஹெங்-மாவாய் சாலையின் 32வது கிலோ மீட்டரில் நேற்று நிகழ்ந்தது.

தலையில் ஏற்பட்ட பலத்தக் காயங்கள் காரணமாக 19 வயதுடைய அந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை சுகாதார அமைச்சின் பணியாளர்கள் உறுதிப் படுத்தியதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் யூசுப் ஓத்மான் கூறினார்.

இந்த விபத்து தொடர்பில் நேற்று மாலை 6.50 மணியளவில் தாங்கள் பொது மக்களிடமிருந்து புகாரைப் பெற்றதாக அவர் சொன்னார்.

அந்த மாணவி ஓட்டிச் சென்ற புரோட்டோன் சாகா கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

பலியான மாணவியின் உடல் சவப்பரிசோதனைக்காக கோத்தா திங்கி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறிய அவர், இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

இதனிடையே, விபத்தில் சிக்கிய மாணவியின் உடலை பள்ளத்தாக்கிலிருந்து மேலே  கொண்டு வருவதற்கு சிறப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி முகமது ராபி முகமது நோர் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.