கோல திரங்கானு, பிப். 28- துப்புரவு பணிகளை மேற்கொண்டிருந்த போது திரங்கானு ஆற்றின் முகத்துவாரத்தில் தவறி விழுந்ததாகக் கூறப்படும் கப்பல் சிப்பந்தி ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் இங்குள்ள மஸ்ஜிட் கிறிஸ்டல் அருகே கண்டுபிடிக்கப்பட்டார்.
அகமது நசாருடின் முகமது (வயது 35) என்ற அந்த ஆடவரின் உடலை சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டரில் உணவகப் பணியாளர் ஒருவர் நேற்றிரவு 9.34 மணிக்கு கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கோல திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நோர் கூறினார்.
அந்த ஆடவரின் உடல் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டு சவப்பரிசோதனைக்காக இங்குள்ள சுல்தான நுர் ஜாஹிரா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து தாங்கள் மிகுந்த வருத்தமடைவதாகக் கூறிய பலியான அகமது நசாருடினின் சகோதரியான சித்தி ஜரினா முகமது (வயது 42), இருப்பினும் அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து தாங்கள் மன நிம்மதி அடைவதாகத் தெரிவித்தார்.
கப்பலில் இருந்து விழுந்த போது தலையில் ஏற்பட்டதாக நம்பப்படும் காயம் தவிர அவரது உடலில் வேறு எந்த பாதிப்பும் காணப்படவில்லை என்று அவர் சொன்னார்.
இறந்த அகமது நசாருடின் எட்டு மாத கர்ப்பிணி மனைவி மற்றும் நான்கு முதல் பத்து வயது வரையிலான நான்கு பெண் பிள்ளைகளையும் விட்டுச்சென்றுள்ளார்


