ஷா ஆலம், பிப். 25- சிலாங்கூர் மாநிலத்தில் 2007ஆம் ஆண்டு
திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு சட்டம் (சட்டம் 672) அமலுக்கு வந்தபிறகு சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டும் குற்றங்களைப் புரிவோருக்கு100,000 வெள்ளி வரை அபராதமும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.
எதிர்காலத்தில் சிறந்த கழிவு மேலாண்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்த இந்தச் சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான பரிந்துரை கூட்டரசு அரசுடன் பேச்சுவார்த்தை நிலையில் உள்ளது என்று ஊராட்சி மனறங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூயி லிம் கூறினார்.
நாங்கள் 672வது சட்ட அமலாக்கத்தை அங்கீகரித்தால் அச்சட்டத்தில் உள்ள ஷரத்துகளைப் பயன்படுத்தி 100,000 வரை தண்டனை மற்றும் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனையை அமல்படுத்த முடியும்.
விரைவில் சட்டம் 672-ஐ பயன்படுத்துவதுவதன் மூலம் அதனை (சட்டவிரோத கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளை) வெற்றிகரமாக கையாள முடியும் என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் நேற்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
வரும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 672வது சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான முடிவை மாநில அரசு இறுதி செய்யும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த நவம்பர் மாதம்
கூறியிருந்தார்.
இந்தச் சட்ட அமலாக்கத்தின் வாயிலாக கும்புலான் டாருள் ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட நிறுவனம் மூலம் மாநில அரசு தற்போது ஏற்றுவரும் திடக்கழிவு மேலாண்மை செலவைக் குறைக்க இயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டம் 672 ஐ ஏற்றுக்கொள்ள மாநில அரசு கடந்த ஆண்டு மே மாதம்
ஒப்புக்கொண்டது, இதன் மூலம் கெடா, பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், பெர்லிஸ் மற்றும் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்திற்குப் பிறகு அச்சட்டத்தை ஏற்றுக் கொண்ட எட்டாவது மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது.








