ஈப்போ, பிப். 23- இங்குள்ள தாமான் ஹூவர், ஜாலான் சுங் ஆ மிங்கில் உள்ள ஒரு கடை வீதியில் டியூஷன் ஆசிரியரான பெண்மணி ஒருவர் கழுத்து மற்றும் கையில் வெட்டுக்களுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்
இச்சம்பவம் தொடர்பில் அப்பெண்ணின் கணவர் நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக ஈப்போ மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது சஜிடான் அப்துல் சுக்கோர் கூறினார்.
கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி கண் அறுவை சிகிச்சைக்கு செய்த பிறகு ஏற்பட்ட வலி மற்றும் மன அழுத்தத்தை தாங்க முடியாமல் தவிப்பது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருக்கு குறிப்பு ஒன்றை விட்டுச் சென்றது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அப்பெண்மணிக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர், இனி உயிர் வாழ முடியாது என்று தன் கணவரிடம் தெரிவித்துள்ளார். அப்பெண் மரணமடைந்து ஆறு மணி நேரத்திற்கும் மேலாகியிருக்கலாம் நாங்கள் நம்புகிறோம். சம்பவ இடத்தை ஆய்வு செய்ய தடயவியல் மற்றும் உடற்கூறு நிபுணர்கள் அனுப்பப்பட்டனர் என்று சஜிடான் குறிப்பிட்டார்.
அந்த மாதுவின் மரணத்தில் எந்த குற்றத்தன்மையும் இல்லை. கொலைக்கு வழிவகுத்த வேறு எந்த சந்தேகத்திற்கிடமான ஆதாரங்களும் காணப்படவில்லை. மேலும் மடிப்பு கத்தி ஒன்று அவருக்கு (பாதிக்கப்பட்டவருக்கு) பக்கத்தில் இருந்தது என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.
இதுவரை விசாரணையில் எந்த குற்றவியல் கூறுகளும் கண்டறியப்படவில்லை என்றும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முகமது சஜிடான் கூறினார்.
பாதிக்கப்பட்டவருக்கு முன்பு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் விளைவாக அவரது கண்ணில் சீழ் வடிந்துள்ளது. இதனால் அவர் மனச்சோர்வடைந்தது தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.








