சிரம்பான், பிப். 21- இங்குள்ள நீலாய் 3 இல் உள்ள ஒரு கம்பளத் தொழிற்சாலை இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் அழிந்தது.
காலை 7.49 மணிக்கு தீ விபத்து குறித்து அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மூத்த செயல்பாட்டு அதிகாரி கிர் அமீர் அகமது தெரிவித்தார்.
இந்த தீ விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை. தீப்பற்றி எரியும் பொருள் கம்பளம் என்பதோடு அடர்ந்த புகையுடன் பலத்த காற்றும் வீசுவதால் தீயை அணைக்க சிறிது நேரம் ஆகும்.
இருப்பினும், நாங்கள் தற்போது தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என அவர் சொன்னார்.
இந்த தீ விபத்து 27.8 x 46.4 சதுர மீட்டர் பரப்பளவு இடத்தை உள்ளடக்கியது என்று அவர் இன்று பெர்னாமா விடம் மேலும் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் ஒரு மூத்த அதிகாரி மற்றும் 28 உறுப்பினர்களோடு பல இயந்திரங்களும் பயன்படுத்தப் பட்டதாகவும் அவர் கூறினார்.


