ஜோகூர் பாரு, பிப். 21- குளுவாங், சிம்பாங் ரெங்கமில் உள்ள மாச்சாப்பில் இம்மாதம் 10ஆம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் நான்கு உள்நாட்டு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
முப்பத்து நான்கு முதல் 41 வயது வரையிலான அவர்கள் அனைவரும் மஜிடி, கம்போங் மிலாயுவில் கடந்த திங்கள்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் கூறினார்.
இந்த கைது நடவடிக்கையின் போது கருப்பு நிறத்திலான சிக் சவேர் ரக கைத் துப்பாக்கி, கருப்பு நிறத்திலான தோட்டா உறை, போலியானது என சந்தேகிக்கப்படும் கைத் துப்பாக்கி, இரு யமஹா மோட்டார் சைக்கிள்கள், போதைப்பொருள் அடங்கியிருக்கலாம் என நம்பப்படும் இரு பிளாஸ்டிக் பொட்டலங்கள் ஆறு கைபேசிகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட அந்த துப்பாக்கிகள் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். எனினும் அதனை உறுதிப்படுத்துவதற்காக இரசாயன இலாகாவின் ஆய்வறிக்கைக்கு காத்திருக்கிறோம் என்று அவர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.
அந்த நால்வரும் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான பல முந்தைய குற்றப்பதிவுகள் கொண்டிருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள வேளையில் அவர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில் மூவர் மெத்தம்பெத்தமின் போதைப் பொருளைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது என்றார் அவர்.
அந்த நால்வரும் கைது செய்யப்பட்டதன் மூலம் நான்கு குற்றச்செயல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறிய குமார், வேறு குற்றச்செயல்களில் இக்கும்பலின் ஈடுபாடு குறித்து அறிவதற்காக விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்றார்.


