கோலாலம்பூர், பிப். 18 -- குடும்பத் தகராறு காரணமாக ஒரு பெண்மணி தனது கணவரை கத்தியால் குத்திக் கொன்றார். இந்த விபரீதச் சம்பவம் காஜாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே நேற்று காலை 11.05 மணிக்கு நிகழ்ந்தது.
பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல்துறையினரும் தடயவியல் குழுவும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக காஜாங் காவல்துறைத் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் 60 வயதுடைய அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர் எனாறு அவர் சொன்னார்.
கொலையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் என்று நம்பப்படும் கத்தி மற்றும் விசாரணைக்கு உதவக்கூடிய பிற பொருட்களை போலீசார் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றினர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் 59 வயது மனைவி கைது செய்யப்பட்ட வேளையில் விசாரணைக்காக வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) வரை ஐந்து நாட்கள் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் செர்டாங் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது. மதியம் 12.30 மணிக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் பல கத்திக்குத்து காயங்கள் காரணமாக மரணம் சம்பவித்தது என்பது தெரியவந்தது என்றார் அவர்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் ஏஎஸ்பி முகமது ஹபீஸ் ஹம்சாவை 019-6556536 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் நாஸ்ரோன் கேட்டுக் கொண்டார்.
— பெர்னாமா








