அலோர் ஸ்டார், பிப். 15: ஜித்ரா அருகே உள்ள கம்போங் பாயா முயூட்டில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 48,000 கோழிகள் மடிந்தன.
தீ விபத்து குறித்து தமது துறைக்கு இரவு 11.01 மணிக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து சுமார் 25 நிமிடங்களில் தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைந்ததாக ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவரும் மூத்த உதவி தீயணைப்புத் ஆணையருமான முகமது புஸ்தான் காருடின் கூறினார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு ஜித்ரா, புக்கிட் காயு ஹீத்தாம் மற்றும் அலோர் ஸ்டார் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 26 உறுப்பினர்கள் அனுப்பப்பட்டனர். மேலும் புக்கிட் பினாங், செபராங் நியோன்யா, பொக்கோக் செனா, ஜாலான் குண்டூர் மற்றும் கிலாங் தெபு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐந்து தன்னார்வ தீயணைப்புப் படையினரும் உதவிக்கு வந்தனர் என அவர் சொன்னார்.
இந்த தீ விபத்து பகுதி நிரந்தர கட்டிடத்திலான கோழிப் பண்ணை சம்பந்தப்பட்டது. அது கிட்டத்தட்ட 80 சதவீதம் எரிந்து நாசமானது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அந்தப் பண்ணையில் 50,000 கோழிகள் இருப்பதாகத் தமது தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
தீயை அணைக்கும் பணியில் ஆறு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அதிகாலை 12.46 மணியளவில் நடவடிக்கை கட்டுக்குள் வரப்பட்டது என்று அவர் கூறினார்.


